பிரிஸ்பன்: ஆஸ்திரேலியப் பொதுவிருது திடல்தடப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா வாகை சூடினார்.
இறுதிச் சுற்றில் அவர் புதிய தேசிய சாதனையையும் படைத்தார். பந்தயத்தை முடிக்க அவர் 11.37 நொடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, பிரிஸ்பன் நகரில் நடந்த இதே போட்டியின் தகுதிச் சுற்றில் 11.38 நொடிகளில் நூறு மீட்டரை ஓடிக் கடந்தார் சாந்தி.
ஒரே மாதத்தில் மும்முறை அவர் தமது சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 3ஆம் தேதி நியூசிலாந்தில் நடந்த திடல்தடப் போட்டிகளில் 11.46 நொடிகளில் அவர் 100 மீ. பந்தயத்தை முடித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் புதிய சாதனை படைப்பேன் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்ற அவர், நேற்றுக் காலை நடந்த அரையிறுதிச் சுற்றிலும் 11.58 நொடிகளில் முதலிடம் பிடித்தார்.
"வெற்றி மேடையை அலங்கரிக்க வேண்டும் என்று இலக்கு கொண்டிருந்தேன். அதிலும் தங்கம் வெல்ல முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி," என்றார் 26 வயதான சாந்தி.
அடுத்ததாக ஆஸ்திரேலியப் பொதுவிருதில் தமக்குப் பிடித்தமான 200 மீ. ஓட்டத்தில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். அப்போட்டிகள் இன்று இடம் பெறவிருக்கின்றன.
கடந்த வாரம் பிரிஸ்பனில் நடந்த இன்னொரு போட்டியில் 200 மீட்டரை 23.16 நொடிகளில் கடந்து அவர் புதிய தேசிய சாதனை படைத்திருந்தார்.

