சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தைத் தமிழ்நாட்டு முதல்வர் எம்.கே. ஸ்டாலின் தமது குடும்பத்தாருடன் நேரில் கண்டு ரசித்தார்.
பூவா தலையாவில் நான்கு முறை வெற்றியாளர் பட்டம் வென்ற சென்னை அணி வென்றது.
சென்னை அணித் தலைவர் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பந்தடித்தது.
தொடக்க வீரர்களாக ஹேரி புரூக், அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஹேரி புரூக் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அபிஷேக் சர்மா, திரிபாதி இணைந்து சிறப்பாக விளையாடினர்.
தொடர்ந்து ஆடிய அபிஷேக் சர்மா 34 ஓட்டங்கள் எடுத்து நடையைக் கட்டினார்.
அதையடுத்து திரிபாதி 21 ஓட்டங்கள், அணித் தலைவர் மார்க்ரம் 12 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சென்னை அணி சிறப்பாக பந்துவீசியதால் மயங்க் அகர்வால் 2 ஓட்டங்களும் ஹென்ரிச் கிளாசன் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள், ஆகாஷ் சிங், தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 135 ஓட்டங்கள் இலக்குடன் சென்னை அணி பந்தடிக்கத் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர். தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் பந்தைப் பறக்கவிட்டனர். மார்கோ யான்சன் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து 22 ஓட்டங்கள் குவித்தார் கான்வே.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை முறியடித்த கான்வே, 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சென்னை அணி 87 ஓட்டங்கள் எடுத்தபோது 35 ஓட்டங்களில் ருதுராஜ் கெய்க்வாட் 'ரன் அவுட்' ஆனார். ரகானே 9 ஓட்டங்களும் ராயுடு 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கான்வே தொடர்ந்து ஓட்டங்களைக் குவித்தார்.
இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கான்வே 57 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 4வது வெற்றியை பெற்றது.

