தென்கிழக்காசிய விளையாட்டுகள்: நீச்சலில் சிங்கப்பூருக்கு மேலும் மூன்று தங்கம்

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: நீச்சலில் சிங்கப்பூருக்கு மேலும் மூன்று தங்கம்

2 mins read
de2c0546-dfa5-47fc-93d4-853ce1e47b8f
தங்க வேட்டையைத் தொடங்கிவைத்த ஜானத்தன் டான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

நொம்பென்: இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஞாயிற்றுக்கிழமையன்று (7 மே) நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் மேலும் மூன்று தங்கப் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்.

ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்றார் 21 வயது சிங்கப்பூர் வீரர் ஜானத்தன் டான்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 21.95 விநாடிகள்.

இப்போட்டியின் நடப்பு வெற்றியாளரான மற்றொரு சிங்கப்பூர் வீரர் டியோங் ட்ஸென் வெய் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பெண்கள் 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கத்தைக் கைப்பற்றியவர் சிங்கப்பூரின் 20 வயது வீராங்கனை கான் சிங் ஹுவீ.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடங்கள், 1.76 விநாடிகள்.

வெண்கலப் பதக்கத்தையும் வென்றது சிங்கப்பூர்.

வென்றவர் சான் ஸி யி.

தாய்லாந்தின் காமோன்சானோக் குவான்முங் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பெண்கள் 200 மீட்டர் தனிநபர் கலப்பு நீச்சலில் 20 வயது சிங்கப்பூர் வீராங்கனை லட்டிஷியா சிம் தங்கத்தைக் கைப்பற்றினார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடங்கள் 14.49 விநாடிகள்.

மற்றொரு சிங்கப்பூர் வீராங்கனையான குவா ஜிங் வென் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முதன்முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் சிங்கப்பூர் வீரர் நிக்கலஸ் மஹாபீர், ஆண்கள் 100 மீட்டர் நெஞ்சுநீச்சலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

சக சிங்கப்பூரரான மேக்சிமிலியன் ஆங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒரு நிமிடம் 0.97 விநாடிகளில் போட்டியை முடித்து புதிய தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனை படைத்து தங்கம் வென்றார் வியட்னாமின் ஃபான் தம் பாவ்.

ஆண்கள் 4 X 200 மீட்டர் அஞ்சல் நீச்சலில் ஜானத்தான் டான், டேரன் சுவா, கிளென் லிம், அர்டி ஸுல்ஹில்மி அஸ்மான் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.