பாரிஸ்: இம்மாதம் 22ஆம் தேதி பாரிசில் தொடங்கவிருக்கும் பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ் போட்டியில் 14 முறை வெற்றியாளரான ரஃபாயல் நடால் பங்கேற்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியப் பொது விருதின்போது நடால் காயமடைந்த நிலையில், அதிலிருந்து இன்னும் அவர் முழுமையாகக் குணமடையவில்லை.
இந்நிலையில், "பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் நடால் பங்கேற்க முடியாமல் போனால் அது பெருத்த அடியாக இருக்கும்,' என்று முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் கருத்துரைத்துள்ளார். ஆயினும், அதற்குமுன் நடால் உடல்நிலை தேறிவிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மட்ரிட்டில் நடந்த போட்டியிலும் அதற்குமுன் இண்டியன் வெல்ஸ், மயாமி, மான்டி கார்லோ ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளிலும் நடால் பங்கேற்கவில்லை.


