நொம்பென்: சகோதரர்களான சிங்கப்பூரின் குவா ஜிங் வென், குவா திங் வென் இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டதுண்டு. முதன்முறையாக இருவரும் சகோதரர் குவா செங் வென்னுடன் இணைந்து ஒரு பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளனர்.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண், பெண் கலப்பு அஞ்சல் நீச்சல் பிரிவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாக இடம்பெற்ற இப்போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றது.
திங் வென், ஜிங் வென், செங் வென், நிக்கலஸ் மஹாபீர் ஆகியோரைக் கொண்ட குழு எடுத்துக்கொண்ட நேரம் மூன்று நிமிடங்கள் 51.72 வினாடிகள்.
புதிதாகத் தொடங்கப்பட்ட இப்பிரிவில் முத்திரை பதிப்பதற்கு முன்னதாக குவா சகோதரர்கள் நேற்று தனிநபர்களாகப் போட்டியிட்ட பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்கள் 100 மீட்டர் வண்ணப்பூச்சி பாணி நீச்சலில் 59.02 வினாடிகளில் முடித்து தங்கம் வென்றார் ஜிங் வென். சகோதரி திங் வென் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 59.51 வினாடிகள்.
ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் செங் வென் தங்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 52.04 வினாடிகள். கூடுதலாக 0.56 வினாடி எடுத்துக்கொண்ட சிங்கப்பூரின் தியோங் ட்சென் வெய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்கள் 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் தென்கிழக்காசிய விளையாட்டுகள் சாதனையை முறியடித்து தங்கத்தைக் கைப்பற்றினார் சிங்கப்பூரின் லெட்டிஷியா சிம். அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம், 7.94 வினாடிகள். சக சிங்கப்பூரரான கிரிஸ்டீ சுவா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றார் சிம்.
பெண்கள் 100 மீட்டர் மல்லாந்து நீச்சலில் சிங்கப்பூரின் ஃபெயித் எலிசபெத் கூ வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம், 3.68 வினாடிகள்.
சிங்கப்பூரின் மற்றொரு வீராங்கனையான பொனி இயோ ஏழாவது இடத்தில் முடித்தார்.
கம்போடியாவில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் 14 தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளது.

