புத்தாக்க முயற்சிகளுடன் வெற்றிநடை போடும் 'தாறுமாறு ரன்னர்ஸ்'

2 mins read
6f50dcfa-fcf6-4c49-99d6-ec97f60bcb7f
-

மோனலிசா

பொழுதுபோக்கு ஓட்­டக் குழுவான 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' அண்மையில் தமிழில் தனியிசை குத்துப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு மே தினத்தன்று வெளியான இந்தப் பாடல் கடந்த ஆண்டு இக்குழுவினர் முன்னெடுத்து நடத்திய இந்திய மாணவர்களின் கல்விக்கான நிதித்திரட்டு முயற்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளைக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிதி திரட்டு முயற்சியின் மூலம் மொத்தம் $90,000 திரட்டப் பட்டுள்ளது.

'மணிக்கு ஒரு மைல்' என்ற கணக்­கில் ஒரு மணி நேரத்திற்குப் 10 பேர் வீதம் மொத்தம் 26 மணி நேரத்­தில் 42 கிலோ­மீட்­டர் தொலைவு ஓடி இக்குழுவினர் இந்நிதியைத் திரட்டினர்.

இந்நிதி உதவி தேவைப்படும் மாணவர்களின் உப­கா­ரச் ­சம்பளங்­களுக்கும் கடன் உதவிகளுக்கும் பயன்படுகிறது. தாறுமாறு ரன்னர்ஸ் வெளியிட்டுள்ள பாடலுக்கு இசையமைத்தவர் ஷபீர் மியூசிக் ஆசியா நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு புவனேஸ்வரன் கணேசன், 26,

"ஓட்­டங்­களில் ஈடு­ப­டு­ப­வர்களை உற்­சா­க­மூட்­டும் வகை­யில் இப்­பா­டல் அமைய வேண்­டும் என்று திட்­ட­மிட்­டோம். அதற்­கா­கவே குத்­துப்­பா­ட­லைத் தேர்ந்­தெ­டுத்தோம். பல்­வேறு புதிய தொழில்­நுட்ப உத்­தி­க­ளைப் பயன்­படுத்தி ஓடு­ப­வர்­க­ளின் ஆற்­ற­லுக்­கும் சக்­திக்­கும் ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் பாடலை உரு­வாக்­கி­யுள்­ளோம்," என்று அவர் கூறி­னார்.

ஏறத்தாழ ஒரு மாத காலத்­தில் உரு­வான இப்­பா­டல் இசை­ய­மைப்­பிற்­கான முழு ஆத­ர­வை­யும் ஷபீர் மியூ­சிக் ஆசியா நிறு­வ­னம் வழங்­கி­யுள்­ளது. மேலும் இப்­பா­டலை இசை­ய­மைப்­பா­ளர் புவ­னேஸ்­வ­ர­னும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த திரைப்­படப் பாட­கர் குரு அய்­யா­து­ரை­யும் பாடி­யுள்­ளனர்.

இப்­பா­டல் வரி­க­ளின் ஒரு பகு­தியை எழு­திய உயி­ரி­யல் அறி­வி­ய­லா­ள­ரும் சிங்­கப்­பூர் கலை­ஞ­ரு­மான இள­வ­ழ­கன் முரு­கன், 42, "இக்­கு­ழுவைச் சில ஆண்­டு­க­ளாக சமூக ஊட­கங்­க­ளின் வழி கவ­னித்து வந்­தி­ருக்­கி­றேன். உற்­சா­க­மூட்­டும் பெய­ரு­டன் இயங்­கி­வ­ரும் இக்­கு­ழு­வி­ன­ரின் தனித்­து­வத்­தை­யும் சமூ­கப் பணி­க­ளை­யும் மன­தில் வைத்தே இதனை எழு­தி­யுள்­ளேன்," என்று கூறி­னார். இப்­பா­ட­லின் பிற பகு­தி­களை ஷபீர் மியூ­சிக் ஆசி­யா­வின் இசைக்­கு­ழுவினரே எழு­தி­யுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் 2017ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட எங்­க­ளு­டைய குழு, கல்­வி­நிதி திரட்டு­தல் போன்ற சமூகப் பணி­க­ளி­லும் கள­மி­றங்­கி­யி­ருப்­பது பெரு­மைக்­கு­ரிய ஒன்று. அந்த வெற்­றி­யின் ஓராண்டு நிறை­வை நினை­வு­கூர்ந்து கொண்­டா­டும் வகை­யி­லேயே இப்­பா­டலை வெளி­யிட்­டுள்­ளோம்," என்று கூறி­னார் 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' குழு­வின் நிறுவனரான வழக்­க­றி­ஞர் ரமேஷ் செல்­வ­ராஜ், 44.

ஒவ்வொரு வார இறுதியிலும் குழுவாக ஓட்டங்களில் ஈடுபடும் இக்குழு இவ்வாண்டின் இறுதியில் 'கலாசார ஓட்டம்' எனும் புதிய முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிகழ்வில் பெண்களும் ஆண்களும் பாரம்பரிய உடையிலேயே ஓட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் திரு ரமேஷ் தெரிவித்தார்.