நோம்பென்: சிங்கப்பூர் மேசைப் பந்து குழுக்கள் நேற்று ஒரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றன.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் கோயென் பாங்-ஐசாக் குவேக் இணை மலேசியாவின் ஜாவென் சூங்-வோங் குயி ஷென் இணையை 3-1 என்னும் புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
இந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் மேசைப் பந்து குழுக் களுக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது தங்கம் இது.
ஆண்களுக்கான போட்டியில் கடந்த வியாழக்கிழமை மலேசியாவை 3-1 என்னும் புள்ளி எண்ணிக்கையில் சிங்கப்பூர் தோற்கடித்து தங்கம் வென்றது.
முன்னதாக, நேற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களை சிங்கப்பூர் மேசைப் பந்துக் குழுவினர் வென்றனர்.
இரட்டையர் கலப்புப் பிரிவில் சிங்கப்பூரின் கிளாரென்ஸ் செவ், ஸெங் ஜியான் 3-1 என்னும் புள்ளி எண்ணிக்கையில் வியட்நாமிடம் வெற்றியைப் பறிகொடுத்து வெள்ளிக்குத் தகுதிபெற்றனர்.
அதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஸௌ ஜிங்யி-வோங் ஸிங் ரு இணை தாய்லாந்து இணையிடம் வெற்றிவாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
ஏற்கெனவே மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் மேசைப் பந்தில் மட்டும் சிங்கப்பூர் குழுக்கள் இதுவரை ஏழு பதக்கங்களைக் குவித்துள்ளன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக் கான ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அவை நாளை வரை நடக்கும்.

