விளையாடாமலேயே பிரிமியர் லீக் விருதை வென்ற சிட்டி

விளையாடாமலேயே பிரிமியர் லீக் விருதை வென்ற சிட்டி

1 mins read
19632b4f-64e4-4e2b-9b24-603999b2ebd7
சென்ற ஆண்டு சீட்டி லீக் விருதை வென்றபோது கிண்ணத்துக்கு முத்தம் தந்த அதன் நிர்வாகி பெப் கார்டியோலா. படம்: ஏஎஃப்பி -

லண்டன்: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து விருதை வென்றுள்ளது நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி.

ஞாயிற்றுக்கிழமைதான் (21 மே) சிட்டி லீக்கில் விளையாடவிருக்கிறது.

இருந்தாலும் சனிக்கிழமையன்று (20 மே) ஆர்சனல் தோல்வியடைந்ததால் சிட்டி, மறுபடியும் லீக் விருதை வெல்வது உறுதியானது.

இந்த லீக் பருவத்தில் ஆர்சனலுக்கு இன்னும் ஓர் ஆட்டம்தான் எஞ்சியிருக்கிறது.

அந்த ஆட்டத்தில் வென்றாலும் அதனால் சிட்டியைப் பிடிக்க முடியாது.

ஆர்சனலைவிட இரண்டு ஆட்டங்கள் குறைவாக விளையாடியிருக்கும் சிட்டி லீக் பட்டியலில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது ஆர்சனல்.

கடந்த சில வாரங்கள் முன்புவரை பட்டியலில் முதலிடம் வகித்துவந்த அக்குழு திடீரென சரிவை எதிர்கொண்டது.

எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு போட்டிகளிலும் சிட்டி இறுதியாட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.

அவற்றில் வெற்றி கண்டால் அதிகம் பிரசித்திபெற்ற 'டிரெபலை' சிட்டி கைப்பற்றிவிடும்.

இங்கிலாந்து காற்பந்தில் இதுவரை மான்செஸ்டர் யுனைடெட் மட்டும்தான் அதைச் சாதித்திருக்கிறது.