பாரிஸ்: அடுத்த பருவமும் பிரெஞ்சு காற்பந்துக் குழுவான பிஎஸ்ஜியில் தொடர்ந்து விளையாட அதன் நட்சத்திரம் கிலியோன் எம்பாப்பே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று அக்குழுவின் தலைவர் நாசர் அல்-கெலாய்ஃபி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“எனது நிலைப்பாடு இதுதான். கிலியோன் (எம்பாப்பே) இக்குழுவில் இருக்கவேண்டுமானால் அவர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும். தற்போது உலகக் காற்பந்தில் ஆகச் சிறந்த விளையாட்டாளராக இருக்கும் ஒருவரை இலவசமாக வெளியேற நாங்கள் அனுமதிக்கமாட்டோம்,” என்றார் திரு கெலாய்ஃபி.
பிஎஸ்ஜியின் புதிய பயிற்றுவிப்பாளராக லூயி என்ரிக்கே நிமிக்கப்பட்டுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் செய்தியாளர் கூட்டத்தில் எம்பாப்பே பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது திரு கெலாய்ஃப்பி பதிலளித்தார்.
ஒரு குழுவில் விளையாடுவதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு சம்பந்தப்பட்ட விளையாட்டாளரை வேறொரு குழு கட்டணம் ஏதுமின்றி சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாக குழுக்கள் அதைத் தவிர்க்கும் முயற்சிகளை எடுக்கும்.
பிரான்ஸ் நட்சத்திரமான எம்பாப்பே பிஎஸ்ஜியில் விளையாட வகைசெய்யும் ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு நிறைவடைகிறது.