ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரை இளையர் தேர்வு

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரை இளையர் தேர்வு

1 mins read
47a1cd15-52a5-4f42-ac1d-cef2db5eb0bf
செல்வ திருமாறன். - படம்: ஊடகம்

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வாகி உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த செல்வ திருமாறன் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். திருச்சியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கியூபாவைச் சேர்ந்த பயிற்சி யாளரான யோண்ட்ரிஸ் என்பவர், செல்வாவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அனைத்துலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வரும் செல்வ திருமாறன், அண்மையில் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அனைத்துலகப் போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலுக்கான ஆடவர் பிரிவில், 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

16 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீர்ந்தர் சிங் என்ற தடகள வீரர் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

20 வயதுக்கு உட்பட்ட ஆசிய தடகளப் போட்டியிலும் முத்திரை பதித்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வாகி உள்ளார் செல்வ திருமாறன்.

இதையடுத்து, எதிர்வரும் 10ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

தடகளப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் செல்வ திருமாறனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்