தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோனிக்கு 77 அடியில் பதாகை!

1 mins read
285d6279-0c36-412c-838a-b918dd4a4929
டோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள பதாகைகள். - படங்கள்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி ஜூலை 7ஆம் தேதி தமது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிலையில், டோனியின் ரசிகர்கள் புதுமையான வழிகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

உலகம் முழுவதுமுள்ள டோனியின் ரசிகர்கள், அவரது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் குறித்த புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்துள்ளனர்.

அவ்வகையில், தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலும் ஆந்திர மாநிலத்தின் நந்திகாம நகரிலும் டோனிக்குப் பேருயரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் 52 அடியில் இந்தியச் சீருடையிலும் நந்திகாமவில் 77 அடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடையிலும் டோனிக்குப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நந்திகாமவில் உள்ள பதாகைக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

Watch on YouTube

இந்திய அணியின் வெற்றிகரமான தலைவர்களுள் டோனியும் ஒருவர். அவரது தலைமைத்துவத்தின்கீழ் ஒருநாள் உலகக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணம், வெற்றியாளர் கிண்ணம் என மூன்று மகுடங்களை இந்திய அணி சூடியது.

அத்துடன், அவரது தலைமையின்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் ஐந்து முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்