தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாராவை முந்தினார் கோஹ்லி

2 mins read
b39cc2e2-41ff-49ab-9823-8c55dfe5a0aa
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 121 ஓட்டங்களை விளாசினார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராத் கோஹ்லி.

டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லிக்கு இது 29வது சதம்.

நான்காவது ஆட்டக்காரராகக் களமிறங்கி, அவர் அடித்த 25வது சதம் இது.

அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாராவை முந்திவிட்டார் கோஹ்லி. நான்காவது வீரராகக் களமிறங்கி லாரா 24 சதங்களை அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் நான்காவது ஆட்டக்காரராகக் களம் கண்டு அதிக சதம் அடித்தோர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் அந்த வகையில் 44 சதங்களை அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிசும் (35 சதம்) இலங்கை வீரர் மகேலா ஜெயவர்தனேவும் (30 சதம்) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

தற்போது விளையாடிவரும் ஆட்டக்காரர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ஜோ ரூட்டும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும் நான்காவது நிலையில் ஆளுக்கு 19 சதங்களை அடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில், அனைத்துலகப் போட்டிகளில் கோஹ்லி அடித்த 76 சதம் இது. அவர் அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களையும் டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்திருக்கிறார்.

இப்போதைக்கு, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 8,676 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமண், ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடித்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடிக்கத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்