சிங்கப்பூர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் போட்டி

2 mins read
cd4147dc-4eed-474e-bf9a-cb529d2c3364
போட்டியில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள். - படம்: ராம்குமார் செல்லையா
multi-img1 of 3
வெற்றிக்கோப்பையைப் பெறும் சிங்கப்பூர் அணி. 
வெற்றிக்கோப்பையைப் பெறும் சிங்கப்பூர் அணி.  - படம்: ராம்குமார் செல்லையா

சிங்கப்பூர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் (Singapore Tennis Ball Cricket Association) ஏற்பாட்டில் அண்மையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூர் வென்றது.

கடந்த மார்ச் மாத முற்பாதியில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல் போட்டி இது.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அதிகளவு வெளிநாட்டு ஊழியர்கள் பங்குகொண்ட இந்த ‘இண்டோ-சிங்கப்பூர்’ அனைத்துலக டென்னிஸ் பந்து கிரிக்கெட் இருதரப்பு தொடர்போட்டி இம்மாதம் 17ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 7 மணி வரை சிலோன் விளையாட்டு மன்றத்தில் நடைபெற்றது.

மூன்று லீக் ஆட்டங்களுக்குப் பின் இறுதியாட்டம் என மொத்தம் 4 ஆட்டங்கள் இந்தப் போட்டியில் நடைபெற்றன. ஒவ்வோர் ஆட்டத்திலும் 8 ஓவர்களும் மழையின் காரணமாக இறுதியாட்டத்தில் 6 ஓவர்களும் இடம்பெற்றன. இறுதியாட்டத்தில் 3-0 வீதத்தில் சிங்கப்பூர் அணி வென்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் நேபாலில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைப் போட்டியில் சிங்கப்பூர் அணி கலந்துகொள்வதற்கான அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் செயலாளரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு அன்பு சுப்ரமணியன், 47, “இச்சங்கம் தொடங்கி ஏற்பாடு செய்த முதல் போட்டியிலேயே சிங்கப்பூர் அணி வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற பல போட்டிகளை மாணவர்கள், இளையர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் நடத்தவுள்ளோம்,“ என்று கூறினார்.

“இந்திய அணியுடன் மோதியது புதிய அனுபவமாக இருந்தது. பணி அல்லாது இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது சொந்த ஊரில் வசிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இப்போட்டியின் வெற்றி தொடர்ந்து விளையாடுவதற்கு அதிக ஊக்கம் அளிக்கிறது,“ என்று கூறினார் சிங்கப்பூர் அணியின் தலைவரும் கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருமான வடிவேல் மணிகண்டன், 34.

சிங்கப்பூர் குழுவின் நிர்வாகியாகவும் கட்டுமானத்துறையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் ராம்குமார் செல்லையா, 40, “வெளிநாட்டு ஊழியர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இது போன்ற போட்டிகளில் பங்கேற்பது பொழுதுபோக்காக இருக்கும் அதே சமயம் விளையாட்டாளர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது,“ என்றார்.

வெற்றிபெற்ற சிங்கப்பூர் அணிக்குப் கோப்பையும் விளையாட்டாளர்களுக்குப் பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்