புடாபெஸ்ட்: ஹங்கேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் ரெட்புல் அணியைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வாகை சூடினார்.
பந்தயம் தொடங்கியது முதல் முடிவடையும்வரை ஆதிக்கம் செலுத்திய அவர், இவ்வாண்டு தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியைப் பதிவுசெய்தார். இவ்வாண்டு இதுவரை நடைபெற்றுள்ள 11 பந்தயங்களில் வெர்ஸ்டப்பனின் ஒன்பதாவது வெற்றி இது.
குறிப்பிடும்படியாக, இது ரெட்புல் அணியின் 12வது தொடர் வெற்றியாகும்.
இந்தப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மெக்லெரன் அணியின் லாண்டோ நோரிசைவிட 33.7 வினாடிகளுக்கு முன்னதாகவே வெர்ஸ்டப்பன் பந்தயத்தை முடித்தார். சக ரெட்புல் அணி வீரர் செர்ஜியோ பெரேஸ் மூன்றாவது இடத்தில் வந்தார்.
பந்தயத்தை முதல் நிலையில் தொடங்கிய மெர்சிடிசின் லூயிஸ் ஹேமில்டன் நான்காவது இடத்தில் பந்தயத்தை நிறைவு செய்தார்.

