விளையாட்டுத் துளிகள்

2 mins read
a8240169-deae-4970-81a5-80c42f1db71d
பெல்ஜிய கிராண்ட் பிரீயில் வெற்றியைச் சுவைத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். - படம்: ஏஎஃப்பி

வெர்ஸ்டாப்பன் வெற்றிக்கொடி

ஆன்ட்வெர்ப்: தொடர்ந்து எட்டாவது ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் வாகை சூடியிருக்கிறார் நடப்பு உலக வெற்றியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.

அடுத்த பந்தயத்திலும் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஒன்பது பந்தயங்களில் வென்ற உலக சாதனையை அவர் சமன்செய்துவிடுவார்.

பெல்ஜியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த எஃப்1 பந்தயத்தில் வெர்ஸ்டாப்பனின் சக ரெட் புல் குழு வீரரான செர்ஜியோ பெரெஸ் இரண்டாமிடம் பிடித்தார்.

பந்தயத்தைத் தொடங்கும் நிலையைத் தீர்மானிக்கும் போட்டியில் முதலாவதாக வந்தபோதும் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக ஐந்து இடங்கள் பின்னே, அதாவது ஆறாம் நிலையிலிருந்து வெர்ஸ்டாப்பன் பந்தயத்தைத் தொடங்க வேண்டியதாயிற்று.

ஃபெராரி குழுவின் சார்ல்ஸ் லெக்லர்க் மூன்றாம் நிலையிலும் மெர்சிடிஸ் குழுவின் லுவிஸ் ஹேமில்டன் நான்காம் நிலையிலும் பந்தயத்தை முடித்தனர்.

மேஜர் லீக் கிரிக்கெட்: பட்டம் வென்றது நியூயார்க் அணி

டாலஸ்: அமெரிக்காவில் முதன்முறையாக இடம்பெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் எம்ஐ நியூயார்க் அணி வாகை சூடியது.

அவ்வணியின் தலைவர் நிக்கலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 137 ஓட்டங்களை விளாசி, தமது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கினார்.

இறுதிப் போட்டியில் முதலில் பந்தடித்த சியாட்டல் ஆர்க்கஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 52 பந்துகளில் 87 ஓட்டங்களைக் குவித்தார்.

அடுத்து பந்தடித்த நியூயார்க் அணியின் தொடக்க வீரர் ஸ்டீவன் டெய்லர் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆயினும், பூரன் பத்து பவுண்டரி, 13 சிக்சர் என வாணவேடிக்கை காட்ட, நான்கு ஓவர் எஞ்சியிருந்த நிலையிலேயே, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது.

குறிப்புச் சொற்கள்