தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டுத் துளிகள்

2 mins read
d25a9825-d523-4606-b818-9179b62441c2
ஆஸ்திரேலிய அணித்தலைவர் வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடும் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

மழையால் மாறிய ஆட்டப்போக்கு; ஆஷஸ் தொடர் சமனானது

லண்டன்: கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ஓட்ட வித்தியாசத்தில் வென்றதையடுத்து, ஆஷஸ் தொடர் 2-2 எனச் சமநிலை கண்டது.

ஐந்தாம் நாளான திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியினர் அருமையாகப் பந்தடித்தனர். ஒருகட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களை எடுத்திருந்ததால் அவ்வணி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும், மழையால் சிறிதுநேரம் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியபின் வெற்றிக் காற்று இங்கிலாந்து பக்கம் வீசியது.

ஆஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கை 275ஆக இருந்தபோது அதன்வசம் மூன்று விக்கெட்டுகளே எஞ்சியிருந்தன. தமது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடைசி இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி, மகிழ்ச்சியுடன் அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் சரிவிற்கு முக்கியக் காரணமாய்த் திகழ்ந்த இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

லிவர்பூல் தலைவராக வேன் டைக்

லிவர்பூல்: அடுத்த காற்பந்துப் பருவத்தில் லிவர்பூல் குழுவின் தலைவராகத் தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வேன் டைக் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு தற்காப்பு வீரரான இங்கிலாந்தின் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்ட் துணைத் தலைவராகச் செயல்படுவார்.

நெதர்லாந்து அணியின் தலைவருமான 32 வயது வேன் டைக் கடந்த 2018ஆம் ஆண்டில் சௌத்ஹேம்டன் குழுவிலிருந்து லிவர்பூலுக்கு மாறினார். இதுவரை லிவர்பூலுக்காக அவர் 222 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

“இது எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் பெருமையான நாள். இந்தச் சிறப்பான உணர்வை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை,” என்று வேன் டைக் கூறினார்.

இதனிடையே, புதன்கிழமை மாலை சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறும் நட்புமுறை ஆட்டத்தில் பயர்ன் மியூனிக் குழுவை லிவர்பூல் எதிர்த்தாடவிருக்கிறது. இதனைக் காண அரங்கம் முழுதும் பார்வையாளர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் காற்பந்து வீரர்மீது பாலியல் குற்றச்சாட்டு

மட்ரிட்: பிரேசில் காற்பந்து வீரரும் பார்சிலோனா குழுவிற்காக விளையாடியவருமான டேனி ஆல்வெஸ் ஸ்பெயினில் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

கடந்த டிசம்பரில் இரவு விடுதி ஒன்றின் குளியலறையில் இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறி, இவ்வாண்டு ஜனவரி மாதம் 40 வயதான ஆல்வெஸ் கைதுசெய்யப்பட்டார்.

அவரை விடுவித்தால் தப்பிச்சென்றுவிடுவார் எனக் கருதி, அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், அவர் இன்னும் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்