முறையற்ற செயல் குறித்து புகார்: ஃபிஃபா விசாரணை

முறையற்ற செயல் குறித்து புகார்: ஃபிஃபா விசாரணை

2 mins read
424c5681-99c6-485e-a095-c239b3e7c84b
மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கி வெளியேறியுள்ள ஸாம்பிய குழு. - படம்: இபிஏ

சிட்னி: முறையற்ற செயல்கள் குறித்து மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் போட்டியிட்ட ஸாம்பிய குழுவிடமிருந்து புகார் எழுந்துள்ளது.

குழுவினர் அளித்த புகார்கள் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவை குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் ஸாம்பிய மகளிர் காற்பந்துக் குழு வீராங்கனைகளிடம் அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் புரூஸ் எம்வேப்பே முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் உலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) உறுதி அளித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் குறித்து ஸாம்பிய மகளிர் காற்பந்துக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுகள் கடந்த ஆண்டு சமூக ஊடகத்தில் வலம் வந்தன. அதுகுறித்து ஸாம்பிய காற்பந்துச் சங்கம் விசாரணை நடத்தியது

அப்போது அதிகாரபூர்வப் புகார்கள் செய்யப்படவில்லை என்றபோதும் அக்குற்றச்சாட்டுகளை மிகவும் கடுமையானதாகக் கருதுவதாக அது தெரிவித்திருந்தது.

ஸாம்பிய மகளிர் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக எம்வேப்பே 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பற்றி உலகக் கிண்ணப் போட்டியின்போது அவரிடம் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அவற்றை அவர் மறுத்ததுடன், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்று கூறினார். தாம் பதவி விலகத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸாம்பியா, ஸ்பெயினிடமும் ஜப்பானிடமும் படுதோல்வி அடைந்தது. கோஸ்டா ரிக்காவை அது 3-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் போட்டியில் அது தோல்வியைத் தழுவி வெளியேறிவிட்டது.

குறிப்புச் சொற்கள்