தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆர்சனல் நல்ல நிலையில் உள்ளது’

2 mins read
d11b4dfb-0b4d-484d-8761-83473d9f40bb
மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தமது அணியைக் காட்டிலும் ஆர்சனல் அணி நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழு ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் குழுவுடன் ‘கம்யூனிட்டி ‌ஷீல்ட்’ கேடயத்துக்காக மோதுகிறது.

இரு அணிகளும் திடலில் விளையாடுவதற்கு முன்னரே சொற்போரில் இறங்கிவிட்டன. 

சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவும் ஆர்சனல் நிர்வாகி மிக்கல் அர்டேட்டாவும் காற்பந்துக் களத்தில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டவர்கள். அதனால் இம்முறை ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்டியோலா தமது குழுவைக் காட்டிலும் ஆர்சனல் நல்ல நிலையில் உள்ளதாகவும் அதனால் அக்குழுவிற்குக் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த பருவத்தில் அசைக்கமுடியாத குழுவாகத் திகழ்ந்தது மான்செஸ்டர் சிட்டி. இருப்பினும், பருவத்தின் கடைசிகட்டத்தில் அது அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியதால் அக்குழு வீரர்கள் சற்று சோர்வாகக் காணப்பட்டனர். 

“கடந்த முறை ஆர்சனல், சிட்டியைவிட இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதன் பருவத்தை முடித்துக்கொண்டது. அதனால் இந்தப் பருவத்தை தொடங்க அதற்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. பொதுவாக சிட்டி பருவத் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறும். இருப்பினும், மனவுறுதியுடன் சிறப்பாக விளையாடுவோம்,” என்றார் கார்டியோலா.

இம்முறை இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற மனநிலையில் ஆர்சனல் களமிறங்குகிறது. 

டெக்லான் ரைஸ், கய் ஹாவர்ட்ஸ், ஜூரியன் டிம்பர் போன்ற முன்னணி வீரர்களை வாங்கி குழுவை வலுப்படுத்தியுள்ளது ஆர்சனல். அதனால் இம்முறை கடுமையான போட்டி இருக்கும் என்றார் கார்டியோலா.

தொடர்புடைய செய்திகள்

இருப்பினும் தமது அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் எளிதில் வெற்றியை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறினார் கார்டியோலா. 

‘கம்யூனிட்டி ‌ஷீல்ட்’ ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்கும். 

குறிப்புச் சொற்கள்