லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்க் குழுவான செல்சி நிதி விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை அறிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்ய செல்வந்தரான ரோமன் அப்ராமொவிச் செல்சியின் உரிமையாளராக இருந்தபோது அக்குழு நிதி விதிமுறைகளை மீறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் மாஸ்டர்ஸ் புதன்கிழமையன்று பிரிட்டனின் டைம்ஸ் நாளிதழிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
அமெரிக்க செல்வந்தரான டாட் பொவெலி உள்ளிட்டோரின் தலைமையிலான முதலீட்டுக் குழுவிடம் திரு அப்ராமொவிச், 2022ஆம் ஆண்டில் செல்சியை விற்றார். பிரிட்டனில் உள்ள திரு அப்ராமொவிச்சின் சொத்துகளை அந்நாட்டு அரசாங்கம் முடக்கியதைத் தொடர்ந்து செல்சி விற்கப்பட்டது.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததையடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திரு அப்ராமொவிச் செல்சி உரிமையாளராக இருந்தபோது அக்குழுவில் இடம்பெற்ற பல பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களை புதிய உரிமையாளர்கள் ஐரோப்பிய காற்பந்து ஒன்றியம் (யூயேஃபா), இங்கிலிஷ் பிரிமியர் லீக், இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தெரியப்படுத்தினர்.

