தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழு மாற கேன் இணக்கம்

1 mins read
bf0235a6-aa87-4e4e-a2c5-77c33837c869
ஹேரி கேன். - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: இங்கிலாந்துக் காற்பந்துக் குழுத் தலைவரும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு ஆட்டக்காரருமான ஹேரி கேன், ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவிற்கு மாற ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அது நடந்தால் ‘புண்டஸ்லீகா’ எனும் ஜெர்மானியக் காற்பந்து லீக்கில் ஆக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெறுவார் 30 வயதான கேன். இவருக்காக பயர்ன் குழு 100 மில்லியன் யூரோ (S$148.3 மில்லியன்) விலைகொடுக்க தயாராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

முன்னதாக, கேனின் இடமாற்றம் தொடர்பில் பயர்ன் குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் இணக்கம் கண்டதாக வியாழக்கிழமை தகவல் வெளியானது. ஆயினும், ஸ்பர்சுடனான ஒப்பந்தம் இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால் அங்கேயே நீடிக்க கேன் விரும்புவதாகவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், பயர்ன் குழுவுடன் நாலாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கேன் இணங்கியுள்ளதாக ஜெர்மனியின் ‘பில்டு’ செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் ஆட்டக்காரரான கேன், ஸ்பர்ஸ் குழுவிற்காக 435 ஆட்டங்களில் 280 கோல்களை அடித்து, அக்குழு சார்பில் அதிக கோலடித்தோர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ஆயினும், அவர் ஆடிய காலகட்டத்தில் முக்கியக் கிண்ணம் எதையும் ஸ்பர்ஸ் கைப்பற்றியதில்லை.

மாறாக, பயர்ன் குழு தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஜெர்மானிய லீக் பட்டத்தைத் தன்வசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்