மெல்பர்ன்: மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
இங்கிலாந்தின் மகளிர் காற்பந்துக் குழு இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
ஆட்டத்தில் வென்று கிண்ணம் ஏந்தி வரலாறு படைக்க அக்குழுவினர் மிகுந்த முனைப்புடன் உள்ளனர்.
ஆகக் கடைசியாக 1966ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் ஆடவர் குழு கிண்ணம் ஏந்தியது.
அதையடுத்து, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து தகுதி பெறவில்லை.
இவ்வாண்டின் மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து வெகுதூரம் செல்லாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்குழுவின் வீராங்கனைகள் பலர் காயமடைந்திருந்ததே இதற்குக் காரணம். அவர்களில் முக்கிய ஆட்டக்காரர் பெத் டே, அணித் தலைவர் லியே வில்லியம்சன் ஆகியோரும் அதில் அடங்குவர்.
ஆனால் குறிப்பிட்ட ஆட்டக்காரர்களை மட்டும் நம்பியிருக்கும் குழு தங்கள் குழு அல்ல என்று இங்கிலாந்து இம்முறை நிரூபித்துள்ளது.
அக்குழுவின் அனைத்து ஆட்டக்காரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி தடம் பதித்துவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அரையிறுதியில் சொந்த ரசிகர்களுக்கு முன் மிக முனைப்புடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை 3-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.
ஆனால் மறுமுனையில் இருக்கும் ஸ்பெயினைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
முதல் சுற்றில் ஜப்பானிடம் 4-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தபோதிலும் மனந்தளராமல் அடுத்தடுத்த ஆட்டங்களில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதி ஆட்டம் வரை வந்து விட்டனர் ஸ்பானிய மகளிர்.
அரையிறுதியில் சுவீடனை 2-1 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.

