பிரிஸ்பன்: மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் மூன்றாம்-நான்காம் இடத்துக்கான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலியாவும் சுவீடனும் இந்த ஆட்டத்தில் களமிறங்கின.
இறுதி ஆட்டத்தில் விளையாட முடியாத ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, வெண்கலப் பதக்கத்தையாவது தட்டிச் செல்லலாம் என்ற முனைப்புடன் இரு அணிகளும் பொருதின.
இந்நிலையில், ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார் ஃபிரோடோலினா ரோல்ஃபோ .
பிற்பாதி ஆட்டத்தில் சுவீடன் அதன் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. இரண்டாவது கோலை அணித் தலைவர் கொசோவாரே அஸ்லானி போட்டார்.
இறுதி வரை ஆஸ்திரேலியாவால் ஒரு கோல்கூட போட முடியாமல் போக, சுவீடன் வெற்றிக் களிப்பில் மூழ்கியது.
சொந்த மண்ணில் அரையிறுதி வரை சென்ற ஆஸ்திரேலியாவுக்கு பதக்கம் வெல்ல முடியாமல் போனது.
இருப்பினும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதல்முறையாக அரையிறுதி வரை சென்ற பெருமை ஆஸ்திரேலிய மகளிர் அணியைச் சேரும்.

