தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெர்மனியை 4-1 என வீழ்த்தியது ஜப்பான்

2 mins read
1760fee9-c279-48fb-82b6-a04ef1a9fadc
ஜெர்மன் அணி கடைசியாக விளையாடிய 17 அனைத்துலக ஆட்டங்களில் நான்கு முறை மட்டுமே வென்றுள்ளது. - படம்: இபிஏ

வுல்ஃப்ஸ்பர்க் (ஜெர்மனி): அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில் ஜெர்மன் அணியை ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

யூரோ 2024 காற்பந்துப் போட்டியை ஏற்றுநடத்தும் ஜெர்மன் ணிக்கு இது ஒரு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணி முதல் கோலைப் போட்டது.

அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஜெர்மன் அணி 19ஆவது நிமிடத்தில் கோல் அடித்து சமநிலை கண்டது.

சோர்வடையாத ஜப்பான் 22ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து ஆட்டத்தில் மீண்டும் முன்னிலை பெற்றது.

ஜெர்மன் வீரர்கள் கடினமாக முயற்சி செய்தபோதும் அவர்களால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஜப்பான் மேலும் இரண்டு கோல்கள் அடித்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.

“ தங்களை விட ஜப்பானிய வீரர்கள் நன்றாக விளையாடினர். ஆட்டத்தில் பல தருணங்களில் தவறு செய்தோம். தனி நபராகவும் அணியாகவும் தோல்வியடைந்துள்ளோம்.

“ஜெர்மன் அணி இப்படி விளையாடியதில்லை. தகுந்த நடவடிக்கைகள் எடுத்து மீண்டும் வெற்றிக்குப் போராடுவோம்” என்றார் ஜெர்மன் அணித்தலைவர் இக்கோ குன்டோகன்.

சொந்த மண்ணில் மோசமாக விளையாடிய ஜெர்மானிய வீரர்களைக் கண்டித்து விளையாட்டரங்கில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

ஜெர்மன் அணி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளது.

நான்கு முறை காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மன் அணி கடந்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் ஜப்பானிடம் தோற்று வெளியேறியது.

ஜெர்மன் அணி கடைசியாக விளையாடிய 17 அனைத்துலக ஆட்டங்களில் நான்கு முறை மட்டுமே வென்றுள்ளது.

மோசமான தோல்விகள் காரணமாக அணியின் பயிற்றுவிப்பாளர் ஹன்சி பிளிக்கின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் “ஜெர்மன் அணியை வழிநடத்த தாம் தகுதியானவர் என்றும் ஜெர்மன் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்” ஹன்சி பிளிக்கின் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜெர்மன் அணிக்கு பயிற்றுவிப்பாளராக உள்ளார் ஹன்சி பிளிக்கின்.

அவர் நிர்வாகத்தின் கீழ் ஜெர்மன் அணி பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை.

வரும் செவ்வாய்க்கிழமை ஜெர்மன் அணி பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.

இந்த ஆட்டத்தில் தமது முழுபலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஜெர்மனி.

குறிப்புச் சொற்கள்