எஃப்1 கார் பந்தயம்: ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் வெற்றி

எஃப்1 கார் பந்தயம்: ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் வெற்றி

2 mins read
7eece295-b5af-4b02-850c-2aa9f443adad
ஃபெராரி குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் வெற்றி மிதப்பில் இருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

மொத்தம் 62 சுற்றுகள் கொண்ட பந்தயத்தை 29 வயது கார்லோஸ் முதல் நிலையிலேயே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது நிலையில் பந்தயத்தைத் தொடங்கிய ‘மெக்லாரன்’ குழுவின் 23 வயது லேண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஐந்தாவது நிலையில் பந்தயத்தைத் தொடங்கிய ‘மெர்சிடிஸ்’ குழுவின் மற்றொரு வீரரான லூவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தை பிடித்தார். ‘ஃபெராரி’ குழுவின் மற்றொரு வீரரான 25 வயது சார்லஸ் லெக்லர்க் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

சனிக்கிழமை நடந்த, பந்தயத்தைத் தொடங்கும் நிலையைத் தீர்மானிக்கும் தகுதிச் சுற்றுப் பந்தயத்தில் ரெட் புல் குழுவின் இரு வீரர்களும் முதல் பத்து இடங்களில் தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

11வது இடத்தில் பந்தயத்தைத் தொடங்கிய ரெட் புல் குழுவின் ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தயத்தின் முதல் பாதியில் 6வது இடத்திற்கு முன்னேறி இறுதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

இதற்கிடையே, தகுதிச் சுற்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஆஸ்டன் மார்ட்டின் வீரர் லான்ஸ் ஸ்டிரால் பந்தயத்தில் இருந்து விலகினார்.

14வது முறையாக சிங்கப்பூரில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டு 10 மணியளவில் நிறைவடைந்தது. இந்தப் பந்தயத்தை காண 264,108 ரசிகர்கள் திரண்டதாக சிங்கப்பூர் ஜிபி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்த 14வது இரவு நேர போட்டியைக் காண 250,000 பேர் வருவார்கள் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ரசிகர்களின் எண்ணிக்கை விஞ்சி இருக்கிறது.

ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களும் வெளிநாட்டினரும் வெள்ளிக்கிழமை முதல் எஃப்1 திடலிலும் பாடாங் அரங்கிலும் கூடி மின்னல் வேகத்தில் சென்ற கார்களைக் கண்டு ரசித்து உற்சாகமடைந்தனர்.

சிங்கப்பூரில் இரவு நேரத்தில் நடக்கும் எஃப்1 கார் பந்தயத்திற்குத் தொடர்ந்து வலுவான ஆதரவு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

2024 பந்தயத்திற்கான முதல் முன்நுழைவுச்சீட்டுகள் 72 மணி நேரத்திற்கு முன்புதான் விற்பனைக்கு வந்தன. அவை எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்