தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரிசுப்பணத்தைத் திடல் பராமரிப்பாளர்களுக்கு வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்

1 mins read
c83b6686-3c2b-44e5-b3c4-6f104b2b5baf
ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியாவின் முகம்மது சிராஜ். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: ஆட்ட நாயகன் விருதுடன் தமக்கு வெகுமானமாகக் கிடைத்த பரிசுப்பணத்தைத் திடல் பராமரிப்பாளர்களுக்கு வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது சிராஜைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்திய, இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாசா அரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

அப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.

அதனால், அவர் ஆட்ட நாயகனாகத் தேர்வுபெற்றார். அதற்காக அவருக்கு 5,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும் கிடைத்தது.

ஆயினும், அவர் அப்பணத்தைத் தானே வைத்துக்கொள்ளாமல் அதனைத் திடல் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

“இந்தப் பரிசுப்பணம் திடல் பராமரிப்பாளர்களுக்கே போய்ச் சேர வேண்டும். அவர்களின்றி இந்தப் போட்டித் தொடர் நடந்திருக்க முடியாது,” என்றார் சிராஜ்.

முன்னதாக, ஆசிய கிரிக்கெட் மன்றமும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் கொழும்பு, கண்டி அரங்குகளின் திடல் பராமரிப்பாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தன.

ஆசியக் கிண்ணத் தொடரின் பல போட்டிகளில் மழை குறுக்கிட்டபோதும்திடலைப் பேணுவதிலும் தேங்கிய நீரை அகற்றவும் திடல் பராமரிப்பாளர்கள் அயராது பாடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்குச் சுருண்டுவிட, இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, எட்டாவது முறையாக ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

குறிப்புச் சொற்கள்