தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூகாசல் 8-0 வெற்றி; புதிய சாதனை

1 mins read
a7f53f26-b7fc-48bf-a550-d972f97e5c35
ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசலின் எட்டாவது கோலைப் போடும் ஐசாக் (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

ஷெஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 8-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது நியூகாசல் யுனைடெட்.

ஆட்டம் ஷெஃபீல்ட் யுனைடெட்டின் சொந்த மண்ணில் நடைபெற்றது. எதிர்க் குழுவின் சொந்த திடலில் இத்தனை கோல் வித்தியாசத்தில் நியூகாசல் வென்றுள்ளது இதுவே முதல் முறை.

மேலும், நியூகாசலின் எட்டு கோல்களை எட்டு வெவ்வேறு விளையாட்டாளர்கள் போட்டனர். இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் ஒரு குழுவுக்கு இத்தனை பேர் கோல் போட்டதும் இதுவே முதல் முறை.

ஷோன் லோங்ஸ்டாஃப், டேன் பர்ன், ஸ்வென் பொட்மன், கலம் வில்சன், ஆண்டனி கோர்டன், மிகெல் அல்மிரோன், புருனோ குவிமாரெஸ், அலெக்சாண்டர் ஐசாக் ஆகியோர் நியுகாசலின் கோல்களைப் போட்டவர்கள்.

“கோல்களைப் போட்டே தீரவேண்டும் என்ற எங்களின் அணுகுமுறைதான் முக்கியம். மூன்று கோல்களைப் போட்டவுடன் நாங்கள் திருப்தியடைவில்லை. இந்த மனப்போக்கு குழுவில் ஊறிப்போகவேண்டும்,” என்றார் நியூகாசல் நிர்வாகி எடி ஹாவ்.

இந்த பிரிமியர் லீக் பருவத்தை நியூகாசல் மோசமாகத் தொடங்கியது. லீக்கில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியும் கண்டது.

அதனால் சென்ற பருவம் மிகச் சிறப்பாகச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நியூகாசல், இம்முறை மீண்டும் பின்தங்கிப் போகுமோ என்ற அச்சம் எழுந்தது.

ஆனால் லீக்கில் பிரென்ட்ஃபர்டை வென்று, ஷெஃபீல்ட் யுனைடெட்டை நசுக்கியதோடு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் இத்தாலியின் ஏசி மிலானுடன் கோலின்றி சமநிலை கண்டது நியூகாசலுக்குப் புத்துயிர் தந்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்