41 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது

1 mins read
160ee9ed-bd9c-41ae-8ff4-6d14aa9899af
குதிரையேற்றத்தின் ‘டிரஸ்ஸாஜ்’ பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி. - படம்: ஏஎஃப்பி

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் ‘டிரஸ்ஸாஜ்’ பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய அணி சாதித்துள்ளது.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற 41 ஆண்டுகால ஏக்கத்தை இந்திய அணி தீர்த்துக்கொண்டது.

கடைசியாக 1982ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு இப்போதுதான் அது கைவசமாகியுள்ளது.

அத்துடன், ‘டிரரஸ்ஸாஜ்’ பிரிவில் அணியாக இணைந்து இந்தியா தங்கம் வென்றிருப்பதும் இதுவே முதல்முறை.

திவ்யகீர்தித் சிங், சுதீப்தி ஹஜிலா, ஹிருதய் விபுல் சத்தா, அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டுத் தங்கப் பதக்கத்தைத் தமதாக்கினர்.

இப்போட்டியில் சீனா வெள்ளியும் ஹாங்காங் வெண்கலமும் வென்றன.