ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு சங்கிலிக்குண்டு எறிதல் (ஹேமர் துரோ) போட்டிக்கான இறுதிச்சுற்று நடந்தது.
குவைத்தின் அலி சான்காவி சங்கிலிக்குண்டை சுழற்றி வீசினார். குண்டு நேராகச் செல்லாமல் தவறுதலாக இடப்பக்கத்தில் இருந்த போட்டிக்கான தொழில்நுட்ப அதிகாரிகளை நோக்கிச் சென்றது.
வேகமாக சென்ற குண்டு அங்கு அமர்ந்திருந்த அதிகாரி ஒருவரின் காலைத் தாக்கியது. அதில் அந்த அதிகாரி நிலைகுலைந்து போனார்.
காயமடைந்த அதிகாரியின் இடது கால் உடைந்தது, ரத்தம் அதிக அளவில் கசிந்தது.
கீழே விழுந்த அதிகாரியிடம் விரைவாகச் சென்ற சான்காவி அதிகாரிக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து ரத்தகசிவைக் கட்டுப்படுத்தினார்.
பின்னர் அந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அதிகாரி நலமுடன் இருப்பதாக ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எதிர்பாராத விதமாக நடந்த விபத்தால் சான்காவி அதிர்ச்சியடைந்தார். அவர் இறுதிச்சுற்றில் எட்டாவது இடம்பிடித்தார்.