தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: தோல்வியைத் தழுவிய முன்னணிக் குழுக்கள்

2 mins read
5f306eda-23ef-4535-9b65-b2772e0a16c5
லிவர்பூல் குழுவின் டியேகோ ஜோட்டாவுக்கு 69ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால், லிவர்பூல் குழு கடைசி 25 நிமிடங்கள் 9 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணிக் குழுக்களான மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் ஆகியவை அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளன.

சனிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் கிரிஸ்டல் பேலஸ் குழுவும் மோதின.

இந்தப் பருவத்தில் சுமாராக விளையாடி வரும் யுனைடெட், கிரிஸ்டல் பேலஸ் குழுவிடம் தனது முழு பலத்தையும் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாறாக கிரிஸ்டல் பேலஸ் சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பேலஸ் குழுவின் ஜோக்கிம் ஆண்டர்சன் கோல் அடித்தார்.

யுனைடெட் வீரர்கள் இறுதி வரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஆட்டத்தை 1-0 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் வெற்றியாளரும் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் மான்செஸ்டர் சிட்டி குழு உல்வர்ஹேம்ப்டன் குழுவுடன் மோதியது.

ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் உல்வர்ஹேம்ப்டன் குழுவிற்கு முதல் கோல் கிடைத்தது.

சுதாரித்துக்கொண்ட சிட்டி 58ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது. இருப்பினும், உல்ஸ் குழு 66ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது.

இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இப்பருவத்தில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது மான்செஸ்டர் சிட்டி.

பின்னிரவு லிவர்பூல் குழுவுடன் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழு மோதியது.

ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் லிவர்பூல் குழுவின் கர்ட்டிஸ் ஜோன்சுக்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

ஸ்பர்ஸ் குழுத் தலைவர் ஹியூங் மின் சோன் ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முதல் பாதியின் முடிவில் லிவர்பூல் அடித்தது.

ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தபோது லிவர்பூல் குழுவின் டியேகோ ஜோட்டாவுக்கு 69ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

அதனால் லிவர்பூல் குழு கடைசி 25 நிமிடங்கள் ஒன்பது வீரர்களுடன் விளையாட நேர்ந்தது.

ஆட்டத்தின் இறுதி நிமிடடதில் லிவர்பூல் குழுவின் ஜோய்ல் மட்டிப் தவறுதலாக தன் குழுவிற்கு எதிராகவே கோல் அடிக்க, இறுதியில் ஸ்பர்ஸ் குழு 2-1 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்றது.

இதற்கிடையே ஆர்சனல், போர்ன்மத் மோதிய ஆட்டத்தில் ஆர்சனல் 4-0 என்று வெற்றிபெற்றது.

ஆஸ்டன் வில்லா, பிரைட்டன் பொருந்திய ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா ஆறு கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது அந்த அணி.

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி (18), டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (17), ஆர்சனல் (17), லிவர்பூல் (16) என்று முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்