2024 ஒலிம்பிக்: பாரிஸ் நகரில் மூட்டைப்பூச்சி தொல்லை

2024 ஒலிம்பிக்: பாரிஸ் நகரில் மூட்டைப்பூச்சி தொல்லை

படம்: நியாகாலே பாகாயோக்கோ / எக்‌ஸ்

04 Oct 2023 - 7:32 pm

1 mins read

பாரிஸ்: அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தவுள்ள பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூட்டைப்பூச்சி தொந்தரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனால் அந்நாட்டில் சுற்றுப்பயணிகளிடையே அச்சம் எழுந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவரும் வேளையில் இப்பிரச்சினை பிரான்ஸ் அரசாங்கத்துக்குத் தலைவலியாக இருந்து வருகிறது.

பாரிஸ் ரயில்கள், அதிவேக ரயில்கள் ஆகியவற்றின் இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்துள்ளன. இதனால் பாரிஸ் ரயில்களில் தொடர்ந்து நிற்கப்போவதாகக் கூறி பயணிகள் சிலர் டிக்டாக் சமூக ஊடகத்தில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்தனர்.

பாரிசின் ரயில், பேருந்து, டிராம் சேவைகளை நடத்தும் ஆர்ஏடிபி அமைப்பு, அவற்றில் மூட்டைப்பூச்சிகள் காணப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறியது.

முன்னதாக பெர்சி திரையரங்கில் மூட்டைப்பூச்சிகள் இருப்பது குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றை அடையாளம் காண நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்தத் திரையரங்கை நடத்தும் யூஜிசி நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுஒலிம்பிக்பிரான்ஸ்பாரிஸ்போக்குவரத்து