இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா தொடக்கம்

1 mins read
672564b8-47fc-4ad1-8c99-53d359a6017f
அகமதாபாத் விளையாட்டரங்கில் உலகக் கிண்ணத்துடன் பத்து அணிகளின் தலைவர்களும். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்தும் கடந்தமுறை இறுதிப் போட்டியில் போராடித் தோற்ற நியூசிலாந்தும் அகமதாபாத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பொருதுகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து என மொத்தம் பத்து அணிகள் களத்தில் உள்ளன.

ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்.

மொத்தம் பத்து விளையாட்டரங்குகளில் போட்டிகள் நடைபெறும். வரும் 8ஆம் தேதி நடக்கவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி உட்பட ஐந்து போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இடம்பெறும்.

அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 15, 16ஆம் தேதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதியும் நடைபெறும்.

அவ்வகையில், மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும்.

கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி வாகை சூடியது. அதுபோல், இம்முறையும் தாய்நாட்டில் நடக்கும் போட்டிகளில் கிண்ணம் வென்று சாதிக்கும் முனைப்புடன் உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இதனிடையே, புதன்கிழமை நடக்கவிருந்த தொடக்கவிழா ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்