‘உலகக் கிண்ணப் போட்டியால் இந்தியப் பொருளியலுக்கு 2.4 பி. டாலர் லாபம்’

1 mins read
b6b5105f-ac83-409d-ba43-f49c547aba16
இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தைக் காணத் திரண்ட மக்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியை இந்தியா ஏற்றுநடத்துகிறது.

இப்போட்டியின் மூலம் அந்நாட்டின் பொருளியல் 200 பில்லியன் ரூபாய் (2.4 பில்லியன் டாலர்) வரை லாபம் பார்க்கக்கூடும் என்று இந்தியாவின் ‘பேங்க் ஆஃப் பரோடா’ வங்கியின் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி, வியாழக்கிழமையன்று தொடங்கி நவம்பர் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும். உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல ரசிகர்களை இப்போட்டி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண ஆட்டங்கள் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறும். அதனால் சற்றுப்பயண, விருந்தோம்பல் துறைகள் பலனடையும் என்று ஜானவி பிரபாகர், அதித்தி குப்தா ஆகிய பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் திருவிழாக் காலம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அரங்கேறுவது இந்தியப் பொருளியலுக்குப் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்