தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அதிவேக சதம், அதிக ஓட்டம்

1 mins read
மூன்று சாதனைகள் படைத்த தென்னாப்பிரிக்கா
5bc79658-d0d9-4353-982b-b12001f1c7d5
49 பந்துகளில் சதம் விளாசிய மார்க்ரம். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் நூறு ஓட்டங்களை விளாசி, முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்.

டெல்லி விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்தார். 34 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய அவருக்கு அடுத்த 50 ஓட்டங்களை எடுக்க வெறும் 15 பந்துகளே போதுமானதாக இருந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ’பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசியிருந்ததே முன்னைய சாதனை.

இலங்கைக்கு எதிரான போட்டியில், குவின்டன் டி காக் (100), ராஸி வான் டெர் டுஸன் (108), மார்க்ரம் (106) என மூன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் வரலாற்றில் இப்படி ஒரே இன்னிங்சில் மூவர் சதமடித்தது இதுவே முதன்முறை.

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்களைக் குவித்தது. இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்களை எடுத்த அணி என்ற சாதனையையும் அது படைத்தது.

முன்னதாக, 2015ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் இழப்பிற்கு 417 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனிடையே, உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த இலங்கை வீரர் என்ற வேண்டாப் பெருமையைத் தேடிக்கொண்டார் மதீஷா பதிரனா.

குறிப்புச் சொற்கள்