தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மயான அமைதிக்குச் சென்ற மைதானம் பின்னர் பீறிட்டு எழுந்தது

2 mins read
94d21da6-0dbe-48d8-b103-1c2e3498d8c4
ஆட்டத்திற்குத் திருப்புமுனையாக அமைந்தது விராத் கோஹ்லி-கே எல் ராகுல் இணையின் நிதான ஆட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: கடந்த ஆறு உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் தனது முதல் ஆட்டத்தில் வென்றிருந்த ஆஸ்திரேலியா அணி, இம்முறை இந்தியாவிடம் தோல்வியைச் சந்தித்தது.

நடப்பு தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பொருதின.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா, 49.3 ஓவர்களில் 199 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதன்பின் களமிறங்கிய இந்தியா, வெறும் இரண்டு ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தியா படுதோல்வி அடைந்துவிடுமோ என்ற பீதியில் ரசிகர்கள் உறைந்து போயினர். இதன் காரணமாக சேப்பாக்கம் மைதானமே மயான அமைதிக்குச் சென்றது.

இந்நிலையில், விராத் கோஹ்லி - கே எல் ராகுல் இணையின் நிதான அணுகுமுறை ஆட்டத்தின் போக்கை இந்தியா பக்கம் திருப்பியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவர்கள் திறம்படக் கையாண்டனர். இதன் விளைவாக ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால், தொடக்கத்தில் மயான அமைதிக்குச் சென்ற மைதானம் பின்னர் பீறிட்டு எழுந்தது.

சிறப்பாக ஆடிய ராகுல், 115 பந்துகளில் இரண்டு சிக்சர், எட்டு பவுண்டரி உட்பட 97 ஓட்டங்களை விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு முனையில் ஆடிய கோஹ்லி 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

போட்டியை ஏற்று நடத்தும் இந்தியாவிடம் அடைந்த தோல்வியின் மூலம், ஆஸ்திரேலிய அணியின் 24 ஆண்டு வரலாற்றுச் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, 1999 முதல் 2019 வரை நடந்த ஆறு உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதில்லை.

குறிப்புச் சொற்கள்