தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நின்று நிதானமாக டெஸ்ட் ஆட்டம்போல ஆடினோம்’

1 mins read
39d57e79-5652-48e4-ab28-b0e1b7dc09e2
கே எல் ராகுல்-விராத் கோஹ்லி இணை இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்த இந்தியா, டி20 ஆட்ட போக்கிற்குப் பதிலாக டெஸ்ட் அணுகுமுறையைக் கையாண்டது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் பந்தடிப்பாளர்களின் கைகளே ஓங்கியிருந்தன. முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், இந்தியாவுக்கும் தொடக்கத்தில் சோதனை காத்திருந்தது.

அணியின் முன்வரிசை பந்தடிப்பாளர்களில் மூவர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்வரிசை பந்தடிப்பாளர்கள் மூவர் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்திருப்பது இதுவே முதன்முறை.

ஆனால், கே எல் ராகுல்-விராத் கோஹ்லி இணை இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இந்நிலையில், மூத்த வீரர் கோஹ்லியிடம் இருந்து முக்கிய அறிவுரையை தாம் பெற்றதாக ராகுல் கூறினார்.

“நாங்கள் முறையாக பந்தடித்து, சிறிது நேரம் டெஸ்ட் ஆட்டம்போல ஆடி ஆட்டத்தின் போக்கைக் கண்காணிக்குமாறு விராத் என்னிடம் அறிவுறுத்தினார். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இறுதியில், அணிக்காக வெற்றியைத் தேடித் தந்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார் அவர்.

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான ஆஸ்திரேலியா, பந்தடிப்பில் தனது செயல்பாட்டை எண்ணி ஏமாற்றம் அடைந்திருக்கும். அந்த அணியின் பந்தடிப்பாளர்களில் எவரும் அரை சதம் அடிக்கவில்லை.

இந்தியா தரப்பில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் அணுகுமுறையை தாம் கையாண்டதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்