தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கிரிக்கெட் காய்ச்சலால்’ நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

2 mins read
3fdc3575-775f-4c4f-bed5-f8f1d91be1a5
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு, அகமதாபாத் விளையாட்டரங்கில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத்: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்ளும் ஆட்டம் 14ஆம் தேதி சனிக்கிழமை அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடக்கவிருக்கிறது.

இதனையடுத்து, அவ்வரங்கிற்கு அருகில் அமைந்துள்ள பல்வேறு மருத்துவமனைகளும் ‘நோயாளிகளால்’ நிரம்பி வழிகின்றன. போட்டி நாளையொட்டி, மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கூறிக்கொண்டு, திடீரென அதிகமானோர் பதிவுசெய்திருப்பது அம்மருத்துவமனைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கட்டுப்படியான விலையில் தங்கிக்கொள்ளும் நோக்கில்தான் அவர்கள் இப்படியொரு புதுமையான வழியைக் கையாள்வதாக மருத்துவர்கள் பலரும் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள தங்குவிடுதிகள் அறை வாடகையைக் கிட்டத்தட்ட 20 மடங்குவரை உயர்த்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், “இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண வந்துள்ள பலர், மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பதைக் காண்கிறோம்,” என்று அகமதாபாத் மருத்துவச் சங்கத்தின் தலைவர் துஷார் பட்டேல் தெரிவித்தார்.

இதனையடுத்து, அத்தகைய ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அகமதாபாத் மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் சங்கம் தனது உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

“மருத்துவமனைகள் நோயாளி அல்லாதவர்களுக்கு அல்ல,” என்றார் அச்சங்கத்தின் தலைவர் பரத் கதாவி.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அவை முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அப்போட்டிக்காக மேலும் 14,000 நுழைவுச்சீட்டுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விற்பனைக்கு விட்டது.

மறுவிற்பனையில் நுழைவுச்சீட்டு விலை 25 மடங்குவரை விலைபோவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், போலி நுழைவுச்சீட்டுகளை விற்றதாகக் கூறி, அகமதாபாத் காவல்துறை இளையர் நால்வரைக் கைதுசெய்துள்ளது.

விமானப் பயணச்சீட்டுக் கட்டணமும் நான்கு மடங்குவரை உயர்ந்துள்ள நிலையில், மும்பை-அகமதாபாத் இடையே இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உலகின் ஆகப் பெரிய கிரிக்கெட் அரங்கமான மோடி அரங்கில் 132,000 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.

குறிப்புச் சொற்கள்