அதிவேக சதம்: 18 நாள்களில் சாதனை தகர்ப்பு

1 mins read
75d705a0-77cb-47d3-ab9a-03f4f14da1b6
40 பந்துகளில் சதமடித்துச் சாதித்த ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல்.

நெதர்லாந்து அணிக்கெதிராக அக்டோபர் 25ஆம் தேதி புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 44 பந்துகளில் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சருடன் 106 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அக்டோபர் 7ஆம் தேதி இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்து, முன்னைய சாதனையை முறியடித்திருந்தார்.

அது நிகழ்ந்து 18 நாள்களேயான நிலையில், எய்டனின் சாதனையை விஞ்சி, புதிய வரலாறு படைத்துள்ளார் மேக்ஸ்வெல்.

அனைத்துலக ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தமட்டில், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் சதம் விளாசியதே உலக சாதனையாக நீடிக்கிறது.

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 104 ஓட்டங்களை விளாசினார்.

குறிப்புச் சொற்கள்