100 பதக்கங்கள் குவித்த இந்தியா

100 பதக்கங்கள் குவித்த இந்தியா

2 mins read
a22c9e04-8f92-4353-87fb-69722b4a4533
ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று தந்தது ராஜ்குமார் (இடது), சிராங் ஜோடி. - படம்: சமூக ஊடகம்

ஹாங்ஜோ: ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் குவித்துள்ளது.

தற்போது சீனாவின் ஹாங்ஜோ நகரில் போட்டி நடந்து வருகிறது.

சனிக்கிழமை மாலை நிலவரப்பட்டி 29 தங்கப் பதக்கம், 31 வெள்ளிப் பதக்கம், 51 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று இந்தியா சாதித்துள்ளது.

இதற்கு முன்னர் ஜகார்த்தாவில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஆக அதிகமாக 72 பதக்கங்கள் வென்றிருந்தது.

பதக்கம் வென்று சாதித்த வீரர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

“திறமையும், கடின உழைப்பும் வீரர்களுக்கு வெற்றியைத் தந்துள்ளது, இது நாட்டுக்கு ஊக்கம் தருகிறது. 100 பதக்கங்கள் என்பது அளவற்ற மகிழ்ச்சி.

“இளையர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை விளையாட்டு வீரர்களின் வெற்றி நினைவூட்டியுள்ளது” என்று பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

வெற்றிபெற்ற விளையாட்டாளர்களுக்கு இந்திய அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் சமூக ஊடகங்கள் வழி பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமையும் இந்தியா பதக்க வேட்டை நடத்தும் என்று பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர்.

தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் 214 தங்கப் பதக்கங்களுடன் சீனா உள்ளது. அது மொத்தம் 521 பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டாவது நிலையில் 44 தங்கப் பதக்கங்களுடன் ஈரான் உள்ளது. ஜப்பான் 42 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்