ஆப்கானிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கைக்கு உரம் போட்ட வெற்றி

1 mins read
28e9fb7c-83a5-4f0f-b419-0dad59da1f3b
ஆப்கானிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் அவ்வணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி (இடது). ஏமாற்றத்துடன் நடையைக் கட்டும் இலங்கை வீரர். (வலது). - படம்: ஏஎஃப்பி

புனே: இந்தியாவின் புனே நகரில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

28 பந்துகள் எஞ்சியிருக்க ஆப்கானிஸ்தான் வெற்றியைப் பதிவு செய்தது.

எப்படியாவது அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் உள்ளது.

அந்த நம்பிக்கைக்கு இந்த வெற்றி உரம் போட்டுள்ளது.

முதலில் பந்தடித்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆக அதிகமாக பதும் நிசாங்கா 46 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை பந்தடிப்பாளர்கள் பலர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.

அடுத்து பந்தடிக்க களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

முதலில் பந்தடிக்க களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அவருக்குப் பிறகு வந்த பந்தடிப்பாளர்கள், இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நான்கு திசைகளிலும் பறக்கவிட ஆப்கானிஸ்தான் ஓட்ட எண்ணிக்கையை மளமளவெனக் குவித்தது.

இறுதியில், 45.2 ஓவர்களில் வெறும் மூன்று விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக் கனியை ஆப்கானிஸ்தான் பறித்தது.

குறிப்புச் சொற்கள்