வெளியேறியது பங்ளாதே‌ஷ்

1 mins read
8492ab30-9eea-483d-ba7f-d752c55ea3e2
தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வியடைந்த பங்ளாதே‌ஷ்,உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது. - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது பங்ளாதே‌ஷ்.

செவ்வாய்க்கிழமை மாலை கோல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்ளாதே‌ஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள பங்ளாதே‌ஷ், அதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் மெத்தனமாக விளையாடியது பங்ளாதே‌ஷ்.

முதலில் பந்தடித்த பங்ளாதே‌ஷ் 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

நான்கு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த பாகிஸ்தான் இலக்கை எளிதாக விரட்டியது.

இறுதியில் அந்த அணி 32.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு உடையவில்லை.

இருப்பினும் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே உள்ளது.

அடுத்ததாக பாகிஸ்தான் அணி நவம்பர் 4ஆம் தேதி பெங்களூருவில் நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது.

அதைத்தொடர்ந்து அந்த அணி கோல்கத்தாவில் இங்கிலாந்தை நவம்பர் 11ஆம் தேதி எதிர்கொள்கிறது.

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாம் நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்