தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

1 mins read
35c41550-4116-44ab-aa6e-cb393c18c1ac
சதம் அடித்த தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக் (இடது), ராஸி வான் டர் டசன். - படம்: ஏஎஃப்பி

புனே: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா ஏழு ஆட்டங்களில் 12 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

குவின்டன் டி காக், ராஸி வான் டர் டசன் இருவரும் தென்னாப்பிரிக்காவுக்காக சதம் அடித்தனர்.

டி காக் 114 ஓட்டங்களும் வான் டர் டசன் 133 ஓட்டங்களும் குவித்தனர்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 53 ஓட்டங்கள் எடுத்து, அரைசதத்தைக் கடந்தார்.

அணித் தலைவர் டெம்பா பவுமா 24 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

தென்னாப்பிரிக்கா இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அவற்றில் ஆறு ஆட்டங்களில் அது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருப்பது இதுவே முதல்முறை.

இந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு 50 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து டி காக் ஓய்வுபெறுகிறார்.

புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சக்கைப்போடு போட்ட தென்னாப்பிரிக்கா நான்கு விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை எடுத்தது.

பந்துவீச்சில் திணறிய நியூசிலாந்து பந்தடிப்பிலும் திக்குமுக்காடியது.

தென்னாப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகராஜ் மூன்று விக்கெட்டுகளையும் மார்க்கோ யான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

35.3 ஓவர்களில் நியூசிலாந்து 167 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

குறிப்புச் சொற்கள்