மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் புதன்கிழமையன்று வீழ்த்தியது.
தோல்வியின் பிடியில் சிக்கிய யுனைடெட் போட்டியிலிருந்து வெளியேறியது.
மறுமுனையில் நியூகாசல் காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
காலிறுதியில் அது செல்சியுடன் மோதும்.
சொந்த அரங்கில் நியூகாசலிடம் யுனைடெட் படுதோல்வி அடைந்ததை அடுத்து, யுனைடெட்டின் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த மோசமான தோல்விக்குப் பிறகு யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக்கிற்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
“தோல்விக்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். நான் பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன்,” என்றார் டென் ஹாக்.
இடைவேளையின்போது நியூகாசல் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்புடைய செய்திகள்
மிகுவேல் அல்மிரோன், லுவிஸ் ஹால் ஆகியோர் கோல் போட்டனர்.
பிற்பாதி ஆட்டத்தில் ஜோ வில்லோக் நியூகாசலின் மூன்றாவது கோலைப் போட்டார்.
“இந்த அமோக வெற்றி, நியூகாசல் குழுவின் ஒன்றுமையைக் காட்டுகிறது. மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் விளையாடுவதும் கோல் போடுவதும் எளிதன்று. நாங்கள் சிறப்பாக விளையாடி கோல்கள் போட்ட விதம் என்னைப் பெருமிதம் அடையச் செய்துள்ளது,” என்று நியூகாசலின் நிர்வாகி எடி ஹாவ் தெரிவித்தார்.

