தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியா

2 mins read
7e19bd3c-d7b1-4cde-9e4a-386b353b109f
இந்தியாவின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 55 ஓட்டங்களில் சுருண்டது. ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முகம்மது ‌ஷமியை வாழ்த்தும் இந்திய வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

மும்பை: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது இந்தியா.

முதலில் பந்தடித்த இந்தியா எட்டு விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை விளாசியது. அதற்குப் பிறகு 55 ஓட்டங்களில் இலங்கையை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தது.

இலங்கைக்கான வெற்றி இலக்கு 358ஆக இருந்தது. உலகக் கிண்ண வரலாற்றில் அவ்வளவு பெரிய இலக்கை அடைந்து எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை.

அவ்வளவு பெரிய இலக்கு இருந்தபோதும் இலங்கை 10 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. இறுதியில் 55 ஓட்டங்களை மட்டுமே அணியால் எடுக்க முடிந்தது.

19.4 ஓவர்களில் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 18 ஓட்டங்களில் இலங்கையின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது ‌ஷமி.

இந்தியாவின் ‌ஷுப்மன் கில் 92 ஓட்டங்களைக் குவித்தார். விராத் கோஹ்லி 88 ஓட்டங்களையும் ‌ஷ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான சென்ற ஆட்டத்தில் பந்தடிப்பில் அவ்வளவு சரியாக ஆடாமல் பந்துவீச்சில் அசத்திய இந்தியா, இம்முறை இரண்டிலும் வெளுத்துக்கட்டியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது. இதுவரை இப்போட்டியில் தான் விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

“அதிகாரபூர்வமாக நாங்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி தருகிறது.

“மொத்த அணியும் சிறப்பாக விளையாடியுள்ளது. அணி குறையின்றி அபாரமாக ஆடியிருக்கிறது,” என்று இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா கூறியதாக பிபிசி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

“ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த அணியாக இந்தியா தெரிகிறது. எல்லா அம்சங்களிலும் அணி திறமையாக விளங்குகிறது.

“இப்போட்டியில் அது ஆக வலுவான அணி என்பது உறுதி. அத்துடன் சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு சாதகமான அம்சம். திடலில் அணியினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ரசிகர் கூட்டம் ஆதரவு தெரிவிக்கிறது,” என்றார் முன்னாள் இங்கிலாந்து பந்துவீச்சாளர் அலெக்ஸ் ஹார்ட்லி.

ஒவ்வோர் ஆட்டத்திலும் இந்திய அணி மேம்பட்டு வரும் உணர்வு தலைதூக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்