மும்பை: இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலக அளவில் பிரபலமானது.
இவ்வாண்டுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் நடக்கவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுகிறது. ஏலம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது.
அணிகள் எந்ததெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்கிறது, எந்த வீரர்களை வெளியேற்றுகிறது என்ற தகவல்களை நவம்பர் 26ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இதற்கு முன்னர் அந்த தேதி நவம்பர் 15ஆக இருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் திருமணம் இடம்பெறுவதால் ஏலம் நடத்த சரியான ஹோட்டல்கள் கிடைக்கவில்லை என்று ஐபிஎல் அதிகாரி கூறினார்.
கடந்த பருவத்தில் அதிக விலைக்கு வாங்கி சரியாக விளையாடாத வீரர்களை ஐபிஎல் அணிகள் வெளியேற்றக்கூடும்.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் அவரை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டிப்போடக்கூடும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி தன் அணியில் இணைத்துக்கொண்டது.