தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்னாப்பிரிக்காவையும் விட்டுவைக்காத இந்தியா

2 mins read
7870c0f8-8d25-4177-a570-5285b6e97f4a
ரேசி வேன் டர் டுசனை வீழ்த்திய பிறகு கொண்டாடிய இந்திய வீரர்கள். - படம்: ஏஃப்பி
multi-img1 of 2

கோல்கத்தா: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா.

இது, ஒருநாள் கிரிக்கெட்டி போட்டிகளில் தென்னாப்பிரிக்கா சந்தித்துள்ள ஆக மோசமான தோல்வி. திறன்களைப் பொறுத்தவரை தனது அணி இந்தியாவுக்கு ஈடுகொடுக்கவில்லை என்றார் தென்னாப்பிரிக்காவின் பயிற்றுவிப்பாளர் ராப் வால்ட்டர்.

“அது (இந்தியா) மிகவும் அபாரமான அணி. மிகவும் சீரான, அபாரத் திறன்களைக் கொண்ட அணி. அதைக் கையாள வாய்ப்பில்லை,” என்றார் வால்ட்டர். எனினும், தென்னாப்பிரிக்கா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் அணியில் பதற்றம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலில் பந்தடித்த இந்தியா ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ஓட்டங்களை எடுத்தது. வெற்றி இலக்கான 327 ஓட்டங்களைத் துரத்திய தென்னாப்பிரிக்கா, 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்தார் விராத் கோஹ்லி. ஒருநாள் கிரிக்கெட்டில் 49 முறை சதமடித்துள்ள கோஹ்லி, முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக அதிக முறை சதமடித்த வீரர்கள் என்ற பெருமை இருவரையும் சேரும்.

இந்த ஆட்டத்தில் கோஹ்லிக்கு அடுத்தபடியாக ‌ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் மீண்டும் அபாரமாக விளையாடியது இந்தியா. ரவீந்திர ஜடேஜா, தென்னாப்பிரிக்காவின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவின் முகம்மது ‌ஷாமி, குல்தீப் யாதவ் இருவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகம்மது சிராஜ் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையிலான ஆட்டம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு அணிகளும் மிகவும் அபாரமாக விளையாடி வந்தது அதற்குக் காரணம்.

எனினும், இப்படிப்பட்ட ஆட்டத்திலும் வெளுத்துக்கட்டி நெஞ்சை நிமிர்த்தியபடி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைகிறது இந்தியா.

முதல் சுற்றில் அனைத்து ஆட்டங்களையும் வென்ற இந்தியா பட்டியலில் முதலிடத்தைத் தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்