கொழும்பு: இலங்கையின் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் அனைவரையும் அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இடைக்கால கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ரணதுங்கவின் தலைமையில் 1996ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றது இலங்கை.
ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால வாரியத்தில் ஓர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை படுதோல்வி கண்ட பிறகு வாரியத்தின் உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆட்டத்தில் 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. முதலில் பந்தடித்த இந்தியா 357 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கையின் வெற்றி இலக்கு 358 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது இலங்கை. பின்னர் 55 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இதைவிடக் குறைவான ஓட்டங்களை ஓர் அணி எடுத்திருக்கிறது.