புனே: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்து வந்த இங்கிலாந்து ஒரு வழியாக நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளது.
புதன்கிழமை மாலை புனே விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து அணி பந்தடித்தது.
தொடக்கத்தில் நன்றாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து ஆட்டத்தின் நடுவில் திணறத் தொடங்கியது.
இருப்பினும் டேவிட் மலான் 87 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.
இத்தொடரில் தடுமாறி வந்த பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய நெதர்லாந்து ஆட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி தந்தனர்.
இறுதியில் நெதர்லாந்து 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஏழாம் நிலைக்கு முன்னேறியது. நெதர்லாந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.
ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிய இங்கிலாந்துக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகக்கிண்ண இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே ‘சாம்பியன்ஸ் டிராபி’ போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.