தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாய்நாட்டு உணர்வை ஏற்படுத்திய கபடி போட்டி

2 mins read
135e7f1f-a282-45fb-ba51-93bfa0fbd6e6
கடுமையான போட்டியில் குழுவுணர்வுடன் பங்கெடுத்தனர் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: தினேஷ் குமார்

ஒருநாள் கபடி விளையாட்டுப் போட்டியின்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாண்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகத் தொடங்கினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்ரேன் பொழுதுபோக்கு நிலையத்தில் காலை முதல் இரவு வரை நடந்த இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.

‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’, வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புக் கூட்டணி (ஏஜிடபுள்யுஓ), மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு ஆகியவை இணைந்து இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தன.

அணிகள் பலவும் இந்தியாவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை உள்ளடக்கின. அதனால், அவர்கள் நல்ல குழுவுணர்வுடன் விளையாடினர்.

தம் நண்பர்களை ஆதரிக்க சக ஊழியர்கள் பலரும் ஒன்றுதிரண்டு உற்சாகப்படுத்தினர். மழையைப் பொருட்படுத்தாது அவர்கள் போட்டியைக் காண வந்தனர். நேரம் போவது தெரியாமல் போட்டிகள் நடைபெற்றன.

வந்திருந்தவர்களுக்கு தமிழ் முரசு தன் புதிய செயலியை அறிமுகப்படுத்தியதோடு முறுக்குகளையும் வழங்கியது.

பல கடுமையான சுற்றுகளுக்குப் பிறகு ‘ஏஎஸ்கே ரஞ்சித்’ அணி வாகைசூடியது. இரண்டாம் நிலையில் ‘பூவை அம்பாள்’, மூன்றாம் நிலையில் ‘எம்எம்எம் பாய்ஸ்’, நான்காவது நிலையில் ‘கட்டகுடி’ அணிகள் பரிசுக் கிண்ணங்களை வென்றன.

முதல் நான்கு அணிகளும் பரிசுக் கிண்ணங்களை வென்றன.
முதல் நான்கு அணிகளும் பரிசுக் கிண்ணங்களை வென்றன. - படம்: பிரவீன் குமார்

“கபடி போட்டிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தாய்நாட்டிலிருக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. சிறுவயதிலிருந்தே விளையாடிவரும் மகிழ்ச்சியான நினைவுகளை அவை கொண்டு வருகின்றன.”

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு மத்தியில் 80க்கும் மேற்பட்ட கபடி அணிகள் உள்ளன,” என்றார் ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’ தொண்டூழிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார்.

கொவிட்-19 தொற்று நிலவரம் சீரடைந்ததும் கடந்த ஈராண்டுகளில் ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’ இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட கபடி போட்டிகளை சுமார் 48 வெளிநாட்டு ஊழியரணிகளுடன் நடத்தியுள்ளது.

வாரயிறுதி நாள்களில் திருவிழா விளையாட்டுகள், ஆங்கிலப் பாடங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அது வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தி வருகிறது.

கொக்ரேன் நிலையத்தில் நவம்பர் 26ஆம் தேதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரிக்கெட் திருவிழா நடத்தப்படும்.

அடுத்த கபடி போட்டிகள் டிசம்பர் 10, 17ஆம் தேதிகளில் கொக்ரேன், கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையங்களில் நடைபெறும். டிசம்பர் 18ஆம் தேதி அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்துக்கான நடவடிக்கைகளில் இவை அடங்கும்.

குறிப்புச் சொற்கள்