தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஐசிசி’யிலிருந்து இலங்கை தற்காலிக நீக்கம்

1 mins read
de3f52a0-217e-461c-8aa7-92a0fffe0b82
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண ஆட்டத்தில் பந்துவீசும் இலங்கையின் தில்‌ஷன் மது‌ஷங்க (இடது). - படம்: ஏஃப்பி

கொழும்பு: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திலிருந்து (ஐசிசி) இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் அந்நாட்டு கிரிக்கெட் விவகாரங்களில் தலையிட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.

இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை மோசமாக விளையாடிது. அதனையடுத்து இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சு, அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து தற்காலிக நிர்வாகக் குழுவை நியமித்தது.

எனினும், வாரிய உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்வதற்கு இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

“அனைத்துலக கிரிக்கெட் மன்றம் இன்று ஒன்றுகூடியது; மன்றத்தின் உறுப்பினராக இருப்பதற்கான நிபந்தனைகளை இலங்கை பூர்த்திசெய்யவில்லை என்று மன்றம் முடிவெடுத்தது,” என்று அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

“குறிப்பாக தனது விவகாரங்களைச் சொந்தமாகக் கவனித்துக்கொள்ளவேண்டும், நிர்வகிப்பிலும் விதிமுறைகளை வரைவதிலும் அரசாங்கத் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை (பூர்த்திசெய்யப்படவில்லை).

“(இலங்கையின்) தற்காலிக நீக்கம் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை அனைத்துலக கிரிக்கெட் மன்ற வாரியம் வரும் நாள்களில் முடிவெடுக்கும்,” என்று வாரியம் குறிப்பிட்டது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்பது ஆட்டங்களில் இரண்டை மட்டுமே இலங்கை வென்றது. 10 அணிகள் இடம்பெறும் முதல் சுற்றுப் பட்டியலில் அந்த அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்