தென்னாப்பிரிக்காவைத் தூக்கி நிறுத்திய வேன் டர் டூசன்

2 mins read
5a9a7d56-22c7-418c-8482-33c74944bbd3
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண ஆட்டத்தில் பந்தடிக்கும் வேன் டர் டூசன் (வலது). - படம்: ஏஃப்பி

அகமதாபாத்: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் 44 ஓட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 116 ஓட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆனால் அஸ்மாட்டுல்லா ஓமார்ஸாய் 97 ஓட்டங்களை எடுத்து தனது அணியை மீட்டார். 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் எடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 245 ஓட்டங்களாக இருந்தது. இலக்கை அடைய சற்று தடுமாறியபோதும் 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்காவின் ராசி வேன் டர் டூசன் ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களைக் குவித்தார்.

இத்தோல்வியைத் தொடர்ந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது ஆப்கானிஸ்தான்.

தனது இன்னிங்சில் 40 ஓட்டங்களில் எந்த விக்கெட்டையும் இழக்காத ஆப்கானிஸ்தான் 45 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இன்னிங்சின் நடுப்பகுதியில் மேலும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் தனது அணியை மீட்டெடுத்தார் அஸ்மாட்டுல்லா. ஆனால் தென்னாப்பிரிக்கா ஒருவழியாக வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனாலும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் எதிர்பார்ப்புகளை முறியடித்துப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது ஆப்கானிஸ்தான்.

“இப்போட்டியில் உலகிற்கு எங்கள் அணியைப் பற்றிப் புரிய வைத்தோம். பெரிய அணிகளுக்கு எதிராகக் களமிறங்கிப் போராடினோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தலையெழுத்து எங்கள் கையில் இருந்தது. அது ஓர் அதிர்ச்சித் தோல்வி. அதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம்,” என்றார் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஹா‌ஷ்மாட்டுல்லா ‌ஷஹிடி.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா பொதுவாக முதலில் பந்தடிக்காத ஆட்டங்களில் சிரமப்பட்டு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்